திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

 

திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் அமைந்துள்ள மலையையே சிவபெருமானாக மக்கள் வழிபடுவதால், 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கமாகும். அந்த வகையில், தற்போது வரவிருக்கும் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கோவில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த வைகாசி மாத பவுர்ணமி திதியானது வருகிற 30-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்குத் தொடங்கி, மறுநாள் 31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. இந்த இரண்டு நாட்களிலும் பவுர்ணமி திதி நீடித்தாலும், வரும் 30-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கிரிவலம் செல்வதே ஆன்மிக முறைப்படி மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்த பவுர்ணமியுடன் இணைந்து 30-ஆம் தேதி முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி விசாகத் திருநாளும் வருவதால், அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலம் வரும் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் தேவையான குடிநீர், கழிவறை மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தடையின்றி வழங்குவதற்கான முதற்கட்ட பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.