திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 4 நாட்களுக்கு 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 

 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக 4 நாட்களுக்கு 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நவம்பர் 22-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் இருந்து 195, கடலூர் மண்டலத்தில் இருந்து 101, திருவண்ணாமலை மண்டலத்தில் இருந்து 566, வேலூர் மண்டலத்தில் இருந்து 205, காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து 35, திருவள்ளூர் மண்டலத்தில் இருந்து 30 என மொத்தம் 1,132 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நவம்பர் 23-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் மண்டலத்தில் இருந்து 284, கடலூர் மண்டலத்தில் இருந்து 180, திருவண்ணாமலை மண்டலத்தில் இருந்து 802, வேலூர் மண்டலத்தில் இருந்து 485, காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து 82, திருவள்ளூர் மண்டலத்தில் இருந்து 45 என மொத்தம் 1,878 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நவம்பர் 24-ந்தேதி கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் மண்டலத்தில் இருந்து 500, கடலூர் மண்டலத்தில் இருந்து 201, திருவண்ணாமலை மண்டலத்தில் இருந்து 1,212, வேலூர் மண்டலத்தில் இருந்து 818, காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து 152, திருவள்ளூர் மண்டலத்தில் இருந்து 82 என மொத்தம் 3,055 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நவம்பர் 25-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் இருந்து 332, கடலூர் மண்டலத்தில் இருந்து 231, திருவண்ணாமலை மண்டலத்தில் இருந்து 874, வேலூர் மண்டலத்தில் இருந்து 345, காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து 102, திருவள்ளூர் மண்டலத்தில் இருந்து 63 என மொத்தம் 1,947 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்புப் பேருந்துகள் சென்னை கோயம்பேடு, மாதவரம், அடையாறு, புதுச்சேரி, திண்டிவனம், சேலம், பெங்களூரு, திருப்பூர், கோயம்புத்தூர், வேலூர், ஏற்காடு, ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், வந்தவாசி, விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.எனவே, கார்த்திகை தீபத் திருவிழாவுக்குச் செல்லும் பொதுமக்கள் இந்த சிறப்புப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்