பரபரப்பு: கட்டுப்பாட்டை இழந்து மினி வேன் கவிழ்ந்து விபத்து!

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சேத்துப்பட்டு நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தது. வந்தவாசி அடுத்த ஆராசூர் கூட்ரோடு அருகே அந்த வாகனம் வந்து கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மோதாமல் இருக்க வேன் ஓட்டுநர் உடனடியாக வண்டியைத் திருப்பி பிரேக் போட்டுள்ளார்.

வேகமாக வந்த மினி வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையிலேயே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக வேன் ஓட்டுநர் எந்தவிதக் காயமும் இன்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

குளிர்பானங்கள் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.