அரசுப் பள்ளியில் பரபரப்பு..ஆசிரியர் திட்டியதால்   3 மாணவிகள் இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி! 

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான 3 மாணவிகள் விபரீத முடிவெடுத்து இரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர். மாத்திரைகளைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவிகளுக்கு உடல்நலம் மோசமாகப் பாதிக்கப்படவே அங்கு உடனடியாகப் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனைக் கவனித்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாகச் செயல்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகளை மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிகளுக்குத் தீவிர முதலுதவி அளிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவிகள் இத்தகைய விபரீதச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களையும் பெற்றோர்களையும் பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மாணவிகளைத் தட்டியமைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும், பள்ளி ஆசிரியர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகளில் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் மாணவிகளிடம் கூடுதல் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.