61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘திருவிளையாடல்’ ...நவம்பர் 27-ல் ரிலீஸ்!

 

 

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வர உள்ளது.

இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த 1965-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெளியானது. இதில் சிவாஜி கணேசன் சிவபெருமானாகவும், சாவித்திரி பார்வதியாகவும் நடித்திருந்தனர். மேலும் நாகேஷ், டி.எஸ். பாலையா, முத்துராமன், கே.பி. சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவு

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். குறிப்பாக, நாகேஷ் நடித்த தருமி கதாபாத்திரமும், சிவாஜி கணேசனுடன் அவர் இடம்பெறும் கேள்வி - பதில் காட்சிகளும் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

தற்போது லண்டன் மற்றும் ஜெர்மனியில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் படம் மெருகூட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா இப்படத்தை மறுவெளியீடு செய்கிறார். வரும் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய தலைமுறை ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளை ஏற்படுத்துவதுடன், இளம் தலைமுறையினரும் இந்தப் படத்தைப் பெரிய திரையில் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது