“விஜய்யின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி!” - திருமாவளவன்!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், அரசியல் மாச்சரியங்களைக் கடந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். இந்தச் செயலை விசிக தலைவர் திருமாவளவன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
பதவியேற்பு முடிந்த கையோடு, முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாழ்த்துப் பெற்று வருகிறார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மேனாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவரும் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வைகோ (மதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), மற்றும் சீமான் (நாம் தமிழர் கட்சி) ஆகியோரையும் சந்தித்துத் தனது புதிய பயணத்திற்கு வாழ்த்துகளைப் பெற்றார்.
மேலும், முதலமைச்சரைத் அன்போடு வரவேற்ற மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளை அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் பகைமை மற்றும் 'தீண்டாமை' கலாச்சாரம் மாறி, தலைவர்கள் பரஸ்பரம் மரியாதை அளித்துக் கொள்ளும் இந்த புதிய கலாச்சாரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.