இன்று மாலை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் 10 பேர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடிவு... ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கோவில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க மதுரை வருகை!

 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மாலை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், 10 பேர் வரை தீபம் ஏற்ற அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வருகின்றனர்.

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திருக்கார்த்திகையன்று தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன்படி, கோவில் அறங்காவலர்கள் குழு கலைக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். டெல்லியிலிருந்து சென்னை வந்த நீதிபதி பார்த்திபன் மற்றும் நீதிபதி வைத்தியநாதன் ஆகிய இருவரும் இன்று விமானம் மூலம் மதுரை வருகின்றனர்.

மதுரை வந்தவுடன் கோவில் நிர்வாகப் பொறுப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் இரு நீதிபதிகளும், இன்று மாலையில் தீபம் ஏற்றுவது குறித்துப் பட்டர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சி.ஆர்.பி.எஃப். வீரர்களுடன் ஆலோசித்துத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளனர். பின்னர், மலைக்குச் செல்லும் பாதையிலும் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

இன்று மாலையில் தீபத்தூணில் யார் யார் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இறுதி செய்வதற்காக இந்து அமைப்பினர், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் கோவில் பட்டர்களுடன் நீதிபதிகள் ஆலோசிக்கின்றனர். இதில் 10 பேர் வரை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபத்தூணில் 10 பேர் வரை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து உயிர் தியாகம் செய்த பூர்ணசந்திரன் குடும்பத்தினர் மற்றும் 1990-ஆம் ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்திய மறைந்த இந்து முன்னணித் தலைவர் ராஜகோபால் குடும்பத்தினரில் இருந்து யாராவது ஒருவர் கட்டாயம் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகளிடம் இந்து அமைப்பினர் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.