இன்று மாலை மகாதீபம்... திருப்பரங்குன்றம் மலை ஏறி செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி... சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தீவிர கண்காணிப்பு!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று மாலை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மலை மீது ஏறுவதற்குத் தற்போது 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணிக்குள் இக்குழு மலை மீது ஏற அனுமதிக்கப்படும் என வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது ஏறப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இந்து அமைப்பினர் வலியுறுத்தியதன் பேரில் 50 பக்தர்கள் மட்டும் மலை மீது ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட 50 பக்தர்கள் கொண்ட குழு, இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணிக்குள் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என வழிகாட்டுதல் குழு அறிவித்துள்ளது.
இன்று மாலை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மலைக்குச் செல்ல வரும் பக்தர்கள் மலைப் பாதையில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலைச் சுற்றிலும் சி.ஆர்.பி.எஃப். (CRPF) வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபம் ஏற்றப்படும் தூண் அருகே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றும், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், திரண்டு வரும் பக்தர்கள் நாளை வந்து தீபத்தூணைப் பார்த்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.