சினிமாவில் பாக்யராஜ் சம்பாதித்தது இதுதான்... ரூ.70 கோடி சொத்து மதிப்பு; சென்னையில் சொகுசு பங்களா!
தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை திலகம்’ என்று போற்றப்படும் மறைந்த மூத்த இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்கியராஜ் அவர்களின் ஐந்து தசாப்த காலத் திரைப்பயணத்தில் அவர் ஈட்டிய சொத்துக்கள் மற்றும் நிதி மதிப்பு குறித்த விபரங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
1980 மற்றும் 90-களிலேயே லட்சங்களில் சம்பளம் வாங்கிய முன்னணி ஆளுமைகளில் ஒருவரான அவரது ஒட்டுமொத்தச் சொத்து மதிப்பு மற்றும் திரையுலக வாழ்வாதாரம் குறித்த தகவல்களின்படி, இயக்குநர் கே. பாக்கியராஜ் அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் முதன்மை நடிகர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கிய இவர், தனது திரைப்படங்களின் தயாரிப்பு, நடிப்பு ஊதியம் மற்றும் அவர் இயக்கிய காலத்தால் அழியாத திரைப்படங்களின் மறுபதிப்பு உரிமைகள் மூலம் இந்த வருவாயை ஈட்டியுள்ளார்.
அவரது அசையா சொத்துக்களில் மிக முக்கியமானது சென்னையில் உள்ள அவரது வீடு. சென்னை நகரின் இதயப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் கே. பாக்கியராஜ் அவர்களுக்குச் சொந்தமான பிரம்மாண்ட சொகுசு வீடு உள்ளது. தற்போதைய சந்தை மதிப்பின்படி இந்த வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.10 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தவிர அவரது பயன்பாட்டிற்காகச் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் ஒன்றும் அவரிடம் இருந்தது.
பணம், காசு மற்றும் சொத்துக்களைத் தாண்டி தமிழ் சினிமாவில் அவர் சம்பாதித்த மிக முக்கியச் சொத்து மனிதநேயமும், அவர் உருவாக்கிய திரைக்கதை விதிகளும் தான்.
'சுவரில்லாத சித்திரங்கள்' தொடங்கி 'முந்தானை முடிச்சு', 'அந்த 7 நாட்கள்' என அவர் இயக்கிய படங்கள் இன்றைய தலைமுறை இயக்குநர்களுக்கும் திரைக்கதை எழுதுவதற்கான ஒரு பாடப்புத்தகமாகத் திகழ்கின்றன. சினிமா துறையில் பலருக்கும் சிறந்த வழிகாட்டியாகவும், திரையுலகினரால் மதிக்கத்தக்க ஒரு பெருந்தகையாகவும் விளங்கிய அவர் சம்பாதித்த மனிதநேயமே அவரது குடும்பத்திற்கும், தமிழ் சினிமாவிற்கும் அவர் விட்டுச் சென்றுள்ள ஆகச்சிறந்த சொத்தாகக் கருதப்படுகிறது.