"அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்" – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!
விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைதை கண்டித்துப் பாளையங்கோட்டை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் திமுகவினர் நடத்திய வீதி மறியல் போராட்டத்தின் போது, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை மற்றும் தற்போதைய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தப் போராட்டத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரி ஒருவர் மீது நேரடியாகப் பெயர் குறிப்பிட்டுப் புகார் அளித்தார்: "என்னைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர் தான். அந்த அதிகாரியைப் பற்றித் ஆளுநரிடம் பகிரங்கமாகப் புகார் அளிப்பேன்" என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைப் பார்க்கக் கூட அனுமதி மறுப்பதாகவும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒரு எம்.எல்.ஏ-வை தீவிரவாதியை போலக் கைது செய்து அராஜகம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். தற்போதைய ஆட்சியை விமர்சித்துப் பேசிய அவர், தவெக அரசு திமுகவை மிரட்டிவிடலாம் என்று நினைக்கிறது, ஆனால் எந்தச் சூழலிலும் திமுகவை யாராலும் மிரட்ட முடியாது என்றும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு முறியடிப்போம் என்றும் கூறினார்.
மேலும், "ஆதவ் அர்ஜுனா முட்டாள் முதலமைச்சர் எனப் பேசிய போது நாங்கள் அவர்களைக் கைது செய்தோமா? அதிகபட்சம் 4 மாதங்கள் தான் இந்த ஆட்சி இருக்கும்" எனக் காரசாரமாகப் பேசித் தனது எதிர்ப்பைப் பதிவிட்டார்.