விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தி.மு.க. நிர்வாகி நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

 

 

தூத்துக்குடியில் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மீனவரும் தி.மு.க. நிர்வாகியுமான கிளாஸ்டன் உயிரிழந்தார். 50 வயதான இவர் தூத்துக்குடி காந்திநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஆவார்.

40-வது வார்டு தி.மு.க. நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வந்த கிளாஸ்டன், 11 நாட்களுக்குப் பிறகு நேற்று (திங்கள்கிழமை) தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்குச் சென்றுள்ளார்.

உவரி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக முதலுதவி அளித்த சக மீனவர்கள், படகை அவசரமாகத் திருப்பித் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர்.

அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கிளாஸ்டன், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்துக் கூடங்குளம் மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.