தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்பட்ட காவலர் ராஜா திடீர் உயிரிழப்பு!
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்பட்ட ஆயுதப்படை காவலர் ராஜா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
அப்போது போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்றபடி இயந்திரத் துப்பாக்கியுடன் இருந்த காவலரின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப் புகைப்படங்களில் இடம்பெற்றவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றிய காவலர் ராஜா என்பது பின்னர் தெரியவந்தது.
46 வயதான ராஜாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கான சரியான மருத்துவ காரணம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே, 2018-ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்றதுடன், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டது.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அந்தச் சம்பவத்தின்போது இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்பட்ட காவலர் ராஜாவின் மரணம் தற்போது கவனத்தை பெற்றுள்ளது.