தூத்துக்குடி கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி!

 

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முந்தைய முன்விரோதம் காரணமாக நபரைக் கொல்ல முயன்ற வழக்கில், இரண்டு குற்றவாளிகளுக்குத் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தூத்துக்குடி தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலதட்டப்பாறையிலிருந்து கீழதட்டப்பாறை செல்லும் வழியில் உள்ள ஒரு குவாரி அருகில், கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த சமுத்திரம் (40) என்பவர் மீது முன்விரோதம் காரணமாக இருவர் அரிவாளால் தாக்கிைக் கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தட்டப்பாறை காவல் நிலையக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த ஆறுமுகம் (36) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த துரைபாண்டி (32) ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மகேஸ்வரி நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறுமுகம் மற்றும் துரைபாண்டி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.