தூத்துக்குடி மாலுமி மனைவிக்கு அரசு வேலை; பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் ஸ்ரீநாத்!
ஓமன் நாட்டு வணிகக் கப்பலில் பணியில் இருந்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்தின் குடும்பத்திற்குத் தமிழக அரசு ஆதரவை நீட்டியுள்ளது. அவரது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு, மாலுமியின் மனைவிக்கு அரசுப் பணி வழங்கி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டின் சர்வதேச வணிகக் கப்பல் ஒன்றில் தங்கிப் பணியாற்றி வந்தார். அப்போது கடலில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தை நிலைகுலையச் செய்தது. குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த கணவரை இழந்து தவித்த நிஷாந்தின் மனைவி சரோபினுக்கு, அவரது கல்வித் தகுதியின் அடிப்படையில் கருணை நோக்கோடும் போர்க்கால அடிப்படையிலும் அரசு வேலை வழங்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் உத்தரவின்படி, மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இளநிலை உதவியாளர் பணிக்கான அதிகாரப்பூர்வப் பணி நியமன ஆணையைத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இன்று சரோபினிடம் நேரில் வழங்கித் தனது ஆறுதலைத் தெரிவித்தார்.
பணி ஆணையை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், "துயரமான சூழலில் இருக்கும் இந்த மாலுமியின் குடும்பத்திற்குத் தற்போதைய அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். சரோபினின் வாழ்வாதாரத்தையும், அவரது எதிர்காலப் பாதுகாப்பையும் நூறு சதவீதம் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அரசு வேலைக்கான பணி ஆணையைப் பெற்றுக்கொண்ட மாலுமி நிஷாந்தின் மனைவி சரோபின் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களின் இக்கட்டான வாழ்நாளின் இறுதிவரை துணையாக நிற்கும் தமிழக அரசிற்கும் முதலமைச்சருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.