படிக்கட்டில் தொங்கிச் சென்ற மாணவர்கள்... முதலுதவிப் பெட்டி கொடுத்து பாடம் புகட்டிய தூத்துக்குடி போலீசார்!

 

 

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கு, முதலுதவிப் பெட்டிகளைப் பரிசாக வழங்கி தூத்துக்குடி போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மாணவர்கள் பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதால் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தடுக்கும் நோக்கில், சாத்தான்குளம் பேருந்து நிறுத்தம் அருகே பணியில் இருந்த போலீசார், படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி வந்த பேருந்தை நிறுத்தினர். பின்னர், படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களைக் கீழே இறக்கி, அவர்களுக்கு முதலுதவிப் பெட்டிகளை வழங்கினர்.

படிக்கட்டுப் பயணத்தால் விபத்து ஏற்பட்டால் பயன்படுத்திக்கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் தங்களின் தவறை உணர்ந்த மாணவர்கள், இனிமேல் படிக்கட்டில் தொங்கிச் செல்ல மாட்டோம் என உறுதியளித்து, முதலுதவிப் பெட்டிகளை போலீசாரிடமே திருப்பிக் கொடுத்தனர்.தண்டனை வழங்காமல் மாணவர்களின் மனதை மாற்றும் வகையில் செயல்பட்ட சாத்தான்குளம் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.