தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வேன் மீதேறி துப்பாக்கியால் குறிபார்த்த ஏட்டு ராஜா மரணம்: 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

 

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது துப்பாக்கியால் சுடும் காட்சியில் வைரலான ஆயுதப்படை ஏட்டு ராஜா (47) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் ஏட்டாகப் பணிபுரிந்து வந்த ராஜா, கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வாகனத்தின் மீது நின்று துப்பாக்கியால் சுடும் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தேசிய அளவில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்ட அவர், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த காவலர் ராஜாவின் உடலுக்குத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை சேமநல நிதியிலிருந்து ரூ.1 லட்சம் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள மயானத்தில், முப்பது துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை தரப்பில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவியும், கல்லூரியில் பயிலும் இரண்டு மகன்களும் உள்ளனர்.