தூத்துக்குடியில் சோகம்... 2  பைக்குகள் நேருக்கு நேர் மோதி  பொறியியல் கல்லூரி மாணவர் பலி!

 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூரைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (18), திருநெல்வேலி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை இவர் தனது தாய் முத்துமாரியுடன் பைக்கில் புதியம்புத்தூர் வழியாகத் தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார்.

சில்லாநத்தம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மற்றொரு பைக்குடன் இவரது பைக் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் யுவன் சங்கர் ராஜா, அவரது தாய் முத்துமாரி மற்றும் மற்றொரு பைக்கை ஓட்டி வந்த நயினார்புரத்தைச் சேர்ந்த லட்சுமணன் (30) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி யுவன் சங்கர் ராஜா உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக விபத்து முக்கியச் செய்திகளைத் தினமாலை.காம் தளத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.