இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிர்வு - தூத்துக்குடியில் இளைஞர் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்துச் சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞரை ஆறுமுகனேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ரிச்வி (25) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவலறிந்த அந்த இளம்பெண்ணும் அவரது தந்தையும் முகமது ரிச்வியிடம் நேரடியாகச் சென்று தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது அவர் இருவரையும் மிகவும் அவதூறாகப் பேசி, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆறுமுகனேரி காவல் நிலையப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, இளம்பெண்ணை ஆபாசமாகச் சித்தரித்த குற்றத்திற்காக முகமது ரிச்வியைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.