திமுகவில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு - தவெகவில் இணைய திட்டம்!
ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோப்பு வெங்கடாசலத்தைப் பொறுப்பில் இருந்து விடுவித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்படுகிறார். ஈரோடு மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்துடனும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்டச் செயலாளர்களால் நிர்வகிக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்து பின்னர் திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலத்திற்கும், முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே ஈரோடு மாவட்ட அரசியலில் தொடர் மோதல் போக்கு நிலவி வந்தது.
பதவி பறிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுகவில் இணைந்ததில் இருந்து ஒரு நாள் கூட நிம்மதியாகத் தூங்கியதில்லை. தேர்தலில் கட்சிக்குள்ளேயே சிலர் எதிராக வேலை செய்ததால் வெற்றி வாய்ப்பு பறிபோனது" எனக் குற்றம் சாட்டினார். கூடிய விரைவில் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகி, அவர் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.