“ஓட்டு வாங்குனவங்க இங்க வரணும்”... திருப்பத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல்!
திருப்பத்தூர் மாவட்டம் வட புதுப்பட்டு பகுதியில் தொடரும் விபத்துகளைத் தடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வட புதுப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது லாரி ஒன்று மோதிய விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் தொடர்ந்து இதுபோன்று விபத்துகள் நிகழ்ந்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் குதித்தனர். அப்போது, “தேர்தலின் போது யார் ஓட்டு வாங்குனாங்களோ, அவங்க மொத்த பேரும் இங்க வரணும்” என்று அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆவேசமாகக் குரல் எழுப்பினர்.
விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.