திருப்பூரில் விஜய்யைப் பார்க்க வந்தவர்கள் மயக்கம்; உச்சி வெயிலில் விஜய் தரிசனம்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காகச் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (ஏப்.14) திருப்பூர் மாவட்டத்தின் 8 தொகுதிகளில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பெருமாநல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு இன்று காலை முதலே தொண்டர்கள் கடல் போல் திரண்டனர்.

சித்திரை முதல் நாள் என்பதால் திருப்பூரில் வெயில் சதம் அடித்து வருகிறது. தங்களின் அபிமான நடிகரை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என உச்சி வெயிலில் பல மணிநேரம் காத்திருந்த முதியவர்கள் மற்றும் பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.

மயக்கமடைந்தவர்களைத் தொண்டர்களும், போலீசாரும் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர்.

"உற்சாகம் முக்கியம்தான், ஆனால் உயிரும் முக்கியம்" என போலீசார் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல், விஜய் தரப்பிலிருந்தும் தொண்டர்கள் போதுமான தண்ணீர் பந்தல்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.