“பிளாக்கில் டிக்கெட் விற்று அமைச்சரானவர்கள் நேர்மையைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்” - நெல்லையில் சீமான் ஆவேசம்!
“பிளாக்கில் டிக்கெட் விற்று அமைச்சரானவர்கள் நேர்மையைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்; அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் பொது வேட்பாளரா? யார் சொன்னது?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், தேர்தல் அரசியல், திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்துப் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
நெல்லையில் பேசிய சீமான், “அம்பாசமுத்திரத்தில் பணமும் அதிகாரமும் வேலை செய்யும். என்னைச் சட்டமன்றத்திற்கு எப்படியாவது வர விடக்கூடாது எனத் தடுக்க நினைப்பார்கள். தெருத்தெருவாக நடந்து மக்கள் மனதை வென்று சட்டமன்றம் செல்வோம். நான் அம்பை தொகுதியை வென்றால், அது சிறந்த தொகுதியாக மாறும்; நான் மாநிலத்தை வென்றால் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். எல்லாம் மாறும்” என்றார்.
“அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் என்னைப் பொது வேட்பாளராகத் திமுகவோ, அதிமுகவோ அல்லது நானோ அறிவிக்கவில்லை. என்னைப் பொது வேட்பாளராக அறிவித்து விடுவார்களோ என எதிர்க்கட்சியினர் அஞ்சுகின்றனர். கடைசியாக ஆறு பந்துதான் இருக்கு; நாம் அடித்துத்தான் ஆட வேண்டும். நான் எத்தனை முறை தோற்றாலும் சரி, யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“காசு கொடுத்து ஓட்டு வாங்குற தேர்தலில்தான் தோற்றேன்; லட்சியத்தில் உறுதிகொண்டவர்களை வீழ்த்த முடியாது. என்னைப் பதவி வெறி பிடித்தவன் எனச் சொல்கிறார்கள். பதவி வெறி இருந்தால் என்றோ யாருடனோ கூட்டணி வைத்து இன்று அமைச்சராகி இருப்பேன். பணத்து ஆசை, பதவி ஆசை இல்லாதவன் நான்; தோற்றுக்கொண்டே இருப்பவன்தான் வீரன்” என்று சீமான் குறிப்பிட்டார்.
“நான் முதல்வராக இருந்திருந்தால் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன். வாக்கிற்குக் காசு வாங்காமல் வாக்குச் செலுத்திய யாராவது என்னை விரல் நீட்டிப் பேசச் சொல்லுங்கள். சீர்கெட்ட ஆட்சியை ஒரு தலைவன் நடத்துகிறார் என்றால், அதைத் தேர்ந்தெடுத்தது மக்களின் தவறு” எனக் கூறிய அவர், “ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்; என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. பிளாக்கில் டிக்கெட் விற்று அமைச்சரானவர்கள் நேர்மையைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்” என்றும் விமர்சித்தார்.