ஆளுநருக்குத் தவெக பிரமுகர் மிரட்டல்? - ஸ்டாலினையும் வசைபாடியதால் பரபரப்பு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றியும், ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காதது தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஆளுநரை மிரட்டும் வகையில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தமிழகப் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர், தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறி, தவெக நிர்வாகி ஒருவர் மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் ஆளுநரை விமர்சித்துள்ளார்.

ஆளுநரின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்ட அவர், காதுகள் கூசும் வகையில் ஆளுநரை வசைபாடியுள்ளார். ஆளுநரை மட்டுமின்றி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினையும் அந்த வீடியோவில் அவர் மிகவும் கொச்சையாகப் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நபர், ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் பிற எதிர்க்கட்சிகளை அசிங்கமாகப் பேசி வசைபாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவர் தவெக-வின் பெயரால் இத்தகைய மிரட்டல் வீடியோவை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மற்றும் முன்னாள் முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக அந்தப் பிரமுகர் மீது காவல்துறை மற்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற தனிநபர் விமர்சனங்களுக்கும் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என தவெக தலைமை விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.