மகளிர் அணிப் பொறுப்புத் தருவதாக ஆபாசப் படம் எடுத்து மிரட்டல்... தவெக மாவட்டச் செயலாளர் மீது பரபரப்புப் புகார்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயது இளம்பெண் ஒருவர், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி மீது அதிரடிப் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், தவெகவில் இணைந்து மகளிர் அணிப் பொறுப்புப் பெறுவதற்காக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகனைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்துள்ளார். பொறுப்பு வழங்குவதற்காக அவரிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பேச்சைத் தொடங்கிய விஜய் மோகன், நாளடைவில் அவருக்குப் பாலியல் தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனைக் காட்டித் தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டு வந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. தாஹிராவிடம் முறையிட்ட போது, விஜய் மோகனை அழைத்து அந்த வீடியோக்களை அழிக்குமாறு எச்சரித்துள்ளார். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்ட விஜய் மோகன், ஆபாச வீடியோக்களை தான் அழிக்கவில்லை எனக் கூறி மீண்டும் மிரட்டியுள்ளார். தான் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் என்றும், தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி அச்சுறுத்தியதால் அந்த இளம்பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது உயிருக்கும் குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு கோரியும், விஜய் மோகனைக் கைது செய்ய வலியுறுத்தியும் அவர் காவல் நிலையத்தில் சான்றுகளுடன் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இளம்பெண், விஜய் மோகனால் தங்களைப் போன்று இன்னும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ளார். காவல் துறையினர் இப்புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.