'டெட்' தேர்ச்சி பெறுவதற்கான அவகாசம் 2028 ஆகஸ்ட் வரை நீட்டிப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டு நீட்டித்து உச்ச நீதிமன்றம் தற்பொழுது வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகால அவகாசம், தற்பொழுது 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூக மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் கல்வித் தரத்தை உலகளாவிய நிலைக்கு உயர்த்துவதை உறுதி செய்யும் நோக்கில், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது: அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வுபெற உள்ள மூத்த ஆசிரியர்களுக்கு மட்டும் இந்தத் தேர்ச்சியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது.

எஞ்சிய ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணியைத் தடையின்றித் தொடரவும், பதவி உயர்வு பெறவும் 2 ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; தவறும் பட்சத்தில் அவர்களுக்குக் கட்டாய ஓய்வு வழங்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்த உத்தரவின்படி, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகால அவகாசம் வரும் 2027 ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.

2 ஆண்டுகால அவகாசம் தங்களுக்குப் போதாது என்றும், பணிச்சுமைக்கு இடையே தேர்வுக்குத் தயாராக கூடுதல் காலம் தேவை என்றும் கூறி பல்வேறு ஆசிரியர்கள் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விரிவாக விசாரித்த நீதிபதி தீபாங்கர் குப்தா தலைமையிலான அமர்வு ஆசிரியர்களுக்குச் சாதகமான புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, டெட் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசம் 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம், ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று தங்களது தகுதியை நிரூபிக்க வரும் 2028 ஆகஸ்ட் மாதம் வரை கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அவகாச நீட்டிப்பு ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களின் பணி நலனைப் பாதுகாப்பதில் புதிய அரசு ஏற்கனவே தீவிரமான மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆசிரியர்கள் எளிதாகத் தேர்ச்சி பெற உதவும் வகையில், நடப்பு 2026-ஆம் ஆண்டிலேயே 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக இந்தச் சிறப்புத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

நடப்பு 2026-ஆம் ஆண்டில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 2026, ஜூலை 2026 மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மூன்று மாதங்களில் இந்தச் சிறப்புத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஜூலை முதல் வாரத்தில் கூடவுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த 'பம்பர்' உத்தரவு வெளியாகியிருப்பது, தங்களது பணியை இழக்கும் அச்சத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழக ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியையும், தேர்வுக்குத் தயாராவதற்கான போதிய கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது.