திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் வாகன வீதி உலா!

 

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில், சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆவணித் திருவிழா கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமியும் அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடர்ந்து, காலை 7 மணிக்குச் சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் கேடய சப்பரத்திலும் வீதி உலா வந்தனர். அதனைத் தொடர்ந்து மாலையில், சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.

திருவிழாவின் நான்காம் நாளான நேற்று காலையில் சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வந்தனர். அதைத் தொடர்ந்து மாலையில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.