திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம்! யாகசாலை பூஜையுடன் கோலாகலம்

 

 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை (நவம்பர் 10) தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விழாவின் முதல் நாளான நாளை அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.

 

ஆறு நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 15-ம் தேதி மாலை 4 மணிக்கு திருக்கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. மறுநாள் நவம்பர் 16-ம் தேதி சுவாமி குமரவிடங்க பெருமான் - தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

 

விழாவைக் காண சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர், தங்குமிடம், மருத்துவம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன