திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்… ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் பக்தர்கள்!

 

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடற்கரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று (நவம்பர் 15) சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கோவில் கடற்கரையில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்ததுடன், பாறைகளுக்கு இடையே பழமையான சிலைகளும் தென்பட்டன.கடல் உள்வாங்கியதைப் பார்க்க ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர். சிலர் ஆபத்தை உணராமல் கடலுக்குள் இறங்கியும், பாறைகள் மீது அமர்ந்தும் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.

கடலின் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தால் திடீரென கடல் மீண்டும் உள்ளே வர வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் கடலுக்குள் இறங்கவோ, பாறைகள் மீது ஏறவோ வேண்டாம் என போலீசாரும், கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.