திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றம் !
திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயிலில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக உள்ள இந்த தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா சிறப்பு மிக்கதாகும்.
அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிப்பல்லக்கில் கொண்டுவரப்பட்ட கொடிப்பட்டம் பஞ்சவாத்தியங்கள் முழங்க காலை 5.05 மணிக்கு செப்புக்கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 16 வகை அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மார்ச் 2ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் திரளாக திருச்செந்தூரில் கூடிவருகின்றனர்.