மாணவரை ரத்தக்காயம் வரும் வரை தாக்கிய தலைமை ஆசிரியர் - திருநெல்வேலியில் பரபரப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களுக்கிடையே திடீரெனத் தகராறு ஏற்பட்டு மோதல் உருவாகியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த மாணவரை ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்குக் கடுமையாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவரின் பெற்றோர், தலைமை ஆசிரியர் தங்கள் மகனை அடித்துத் துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல், அவரது சாதிப் பெயரைச் சொல்லிக் கொடூரமான வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். ரத்தக்காயமடைந்த அம்மாணவர் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவரை மிருகத்தனமாகத் தாக்கி, சாதி ரீதியாக இழிவுபடுத்திய சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மீது காவல்துறையும் கல்வித்துறையும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.