நெல்லையில் பரபரப்பு: தவெக அரசை விமர்சித்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கொலை!
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே இன்ஸ்டாகிராமில் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து வீடியோ பதிவிட்டு வந்த பெண் ஒருவர், வீட்டில் மர்மமான முறையில் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வனோபி (34). இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வந்தவர். வனோபி தமிழக அரசியல் நிகழ்வுகள், தவெக அரசு மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்துத் தனது விமர்சனங்களை வீடியோக்களாகத் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், வனோபி தனது வீட்டின் அறையில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். மனைவி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர், இச்சம்பவம் குறித்து உடனடியாகப் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வனோபியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்டப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வனோபி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் விமர்சனங்கள் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது தனிப்பட்ட முன்விரோதம் ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் பாப்பாக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.