திருப்பதி உண்டியல் 100 கோடி திருட்டு வழக்கு... அக்டோபர் 17 ம் தேதி விசாரணை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பரக்காமணியில் நடைபெற்ற பெரும் திருட்டு வழக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீயர் மடத்தில் பணியாற்றிய ரவிக்குமார், காணிக்கைகளை கண்காணிக்கும் பணியில் இருந்தபோது பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் அவர் 107 அமெரிக்க டாலர்களை திருடியதும், ரூ.100 கோடி மதிப்புள்ள நகைகள் காணாமற்போனதும் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பம் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கோயிலுக்கு தானமாக வழங்கினர். பின்னர் இந்த வழக்கு லோக் அதாலத் மூலம் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு, சந்திரபாபு நாயுடு அரசு வழக்கை மீண்டும் திறந்து சிஐடிக்கு ஒப்படைத்தது. இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், காவல்துறை அதனை செயல்படுத்தாததை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. “ஆந்திர காவல்துறையை மூடுவது நல்லது! டிஜிபியும் போலீஸும் தூங்கிக்கொண்டிருக்கிறார்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, ஏ.டி.ஜி.பி. ரவிசங்கர் தலைமையிலான குழு பரக்காமணியில் நேரில் ஆய்வு மேற்கொண்டது. “கோர்ட் உத்தரவுப்படி அனைத்து ஆவணங்களையும், கேமரா பதிவுகளையும் பறிமுதல் செய்து சீல் வைத்து எடுத்துச் செல்கிறோம். திருட்டு நடந்த நேரம், பணியாளர்கள் விவரம், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார். வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!