திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்!

 

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் புனிதத்தன்மையை நிரந்தரமாக உறுதி செய்யும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசு நிறுவனத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த 2019-2024 ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், திருப்பதி லட்டு தயாரிப்பில் சுமார் 70 லட்சம் கிலோ கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாகப் பெரும் புகார் எழுந்தது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. மற்றும் ஆந்திர அரசின் தனிநபர் விசாரணை கமிஷன் ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

அண்மையில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையில், லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்படவில்லை என்றாலும், தரம் குறைந்த நெய் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், லட்டு பிரசாதத்தின் மீதான பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் தேவஸ்தானம் இந்த  நடவடிக்கையை எடுத்துள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு குழுமத்தின் கீழ் இயங்கும் புகழ்பெற்ற மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது கைகோர்த்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் லட்டு பிரசாதத்தின் பாரம்பரிய சுவை, மணம் மற்றும் புனிதத்தன்மை சற்றும் மாறாமல், அதன் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், லட்டின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் விஞ்ஞானிகள் அதிநவீன தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளனர். இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய மாற்றங்கள்:

கடும் தரக்கட்டுப்பாடு: பிரசாதத்திற்கான மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்யும் ஆரம்பக் கட்டம் முதல், லட்டு தயாரித்து விநியோகிக்கும் இறுதிப் படிநிலை வரை அனைத்து நிலைகளிலும் கடுமையான அறிவியல்பூர்வ கண்காணிப்பு முறைகள் பின்பற்றப்படும்.

லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படும் பிரம்மாண்ட மடப்பள்ளி மற்றும் மூலப்பொருட்கள் வைக்கப்படும் சேமிப்புக் கிடங்குகள் முழுமையாக நவீனமயமாக்கப்படும். நெய் உள்ளிட்ட பொருட்களில் எவ்விதமான ரசாயன அல்லது இதர கலப்படங்களையும் கண்டறியும் வகையில் மேம்பட்ட பகுப்பாய்வு நுட்பங்கள் மற்றும் செயல்முறைகள் பரிந்துரைக்கப்படும்.

திருப்பதி தேவஸ்தானத்தின் உணவு பகுப்பாய்வாளர்கள் மற்றும் சமையல் பணியாளர்களுக்கு, நவீன உணவுப் பாதுகாப்பு முறைகள் மற்றும் பேக்கேஜிங் முறைகள் குறித்து மத்திய அரசு நிறுவன விஞ்ஞானிகள் நேரடியாகப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

மத்திய அரசின் இந்த உயர் தொழில்நுட்பக் கூட்டு முயற்சியின் மூலம், திருப்பதி லட்டின் தரம் மற்றும் தூய்மை இனி வரும் காலங்களில் நூறு சதவீதம் உறுதி செய்யப்படும் எனப் பக்தர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.