திருப்பதியில் எல்லை மீறிய தம்பதியர் மீது வழக்குப்பதிவு - திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!
திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் விதிகளை மீறிச் சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்' வீடியோ படமாக்கிய தம்பதியினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருமலை கோயில் வளாகத்தின் முக்கியப் பகுதிகள், மாட வீதிகள் மற்றும் கோபுரப் பகுதிகளில் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், தம்பதி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
திருப்பதி கோயிலின் புனிதத்தன்மையைக் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட அந்தத் தம்பதி மீது தேவஸ்தான பாதுகாப்புப் பிரிவினர் அளித்த புகாரின் பேரில் சட்டப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் செல்போன் மூலமாக ரீல்ஸ் எடுத்து வெளியிடும் போக்கு அதிகரித்து வருவதால், பக்தர்களின் மனம் புண்படுவதைத் தடுக்க இனி ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. புனிதத் தலங்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.