திருப்பதியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 நிமிடங்களில் 'இலவச ஏழுமலையான் தரிசனம்' திட்டம் தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் முதியோர்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்கும் வகையில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்கள் வெறும் 30 நிமிடங்களில் சுவாமி தரிசனம் செய்யும் புதிய பிரத்யேக 'இலவச விசேஷ தரிசனத் திட்டத்தை' திருப்பதி திருமலை தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
திருப்பதிக்கு வரும் மூத்த குடிமக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்திற்கான சிறப்பு வழிமுறைகளைத் தேவஸ்தானம் வகுத்துள்ளது. முதியோர்களின் வசதிக்காகத் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தச் சிறப்பு இலவசத் தரிசனத்திற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதியோர்கள் எளிதாகச் சென்று வரும் வகையில், எவ்வித படிக்கட்டுகளும் இல்லாத மிக எளிமையான பிரத்யேகப் பாதை இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரிசையில் நின்ற 30 நிமிடங்களிலேயே ஏழுமலையானை மிக அருகில் தரிசித்து விட்டுப் பக்தர்கள் வெளியே வந்துவிடலாம்.
இத்திட்டத்தின் கீழ் இலவசமாகத் தரிசனம் செய்ய விரும்பும் முதியோர்கள் திருமலையில் உள்ள கவுண்டர் எஸ்-1 பகுதிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும்: 65 வயது பூர்த்தியாகியிருப்பதை உறுதி செய்யும் விதமாகத் தங்களது வயதுச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டையை அங்குள்ள அதிகாரிகளிடம் காட்டி, அதற்கான பிரத்யேகத் தரிசன அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொதுவாகத் திருப்பதியில் சாதாரணத் தரிசன வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வரும் நிலையில், முதியோர்களுக்காகத் தேவஸ்தானம் கொண்டு வந்துள்ள இந்த 30 நிமிடப் படிக்கட்டுகள் இல்லாத இலவசத் தரிசன முறை, நாடு முழுவதிலும் இருந்து திருப்பதிக்கு வரும் வயதான பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.