கொலை நகரமாக மாறிய திருப்பூர்... ஒரே வாரத்தில் 4 கொலைகள்... வீடு புகுந்து இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை!

 

பனியன் நகரமான திருப்பூரில் வீடு புகுந்து இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து, அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீப காலங்களாக வன்முறை, கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், திருப்பூரில் மட்டுமே கடந்த ஒரு வார காலத்தில் 4 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா (36) என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து திருப்பூருக்கு வந்துள்ளார். அங்குள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் டெய்லராக வேலை பார்த்து வந்த அவர், பெரிச்சிபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

வேலைக்குச் சென்றபோது வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி அருண்குமார் (36) என்பவருடன் ராதிகாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

ராதிகா வேறு ஒரு வாலிபருடன் செல்போனில் அடிக்கடி பேசி வருவதாக அருண்குமாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ராதிகாவின் செல்போன் பிசியாக இருந்ததால் ஆத்திரமடைந்த அருண்குமார் அவரது வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.

வீட்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, அருண்குமார் ராதிகாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி விழுந்த ராதிகாவின் தலை அருகில் இருந்த மரக்கட்டிலில் பலமாக மோதியதுடன், அவர் மயங்கிய நிலையிலும் அவரது கழுத்தை நெரித்து அருண்குமார் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார்.

நீண்ட நேரமாகக் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர் ராதிகா இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தலைமறைவாக இருந்த அருண்குமாரைக் கைது செய்தனர்.

செப்டம்பர் 6: திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே குள்ளி செட்டியார் வீதியில் தலையில் கல்லைப் போட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதே நாளில் வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் இட்லி கடை நடத்தி வந்த சசிராஜன் (67) என்பவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

செப்டம்பர் 7: அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவில் வசித்து வந்த மகளிர் சுயஉதவிக் குழுத் தலைவி விசாலாட்சி (40) படுகொலை செய்யப்பட்டார். தற்போது ராதிகாவின் கொலையையும் சேர்த்து, ஒரே வாரத்தில் 4 படுகொலைகள் நிகழ்ந்திருப்பது பனியன் நகர் மக்களிடையே பெரும் பீதியையும் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.