MLA அருள்விக்னேஷிடம் இன்று விசாரணை - திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரிக்கிறார்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பித் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் புகாரில், 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி (தனி) த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சிருஷ்டி சிங், இன்று காலை 10 மணிக்கு மேல் விசாரணையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீதான வழக்கை நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்க மூத்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகத் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. காமினி விசாரணையைக் கண்காணிப்பார் என்றும் தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் தொடர்புடைய ஆவணங்கள் புதிய விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங்கிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராகக் கோரி எம்.எல்.ஏ. அருள்விக்னேஷுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்குத் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஒருபுறம் எம்.எல்.ஏ. அருள்விக்னேஷிடம் இன்று விசாரணை தொடங்க உள்ள நிலையில், மறுபுறம் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும், அதற்கு முன்பாகவே அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இன்றைய விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.