ரூ.20,000 லஞ்சம் வாங்கிய திருப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது!

 

கட்டிடப் பணிகளுக்கான பில் தொகையை அனுமதித்து வழங்க ரூ.20,000 லஞ்சம் வாங்கிய திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

காங்கேயம் தாலுகா கோவில்பாளையத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரன் என்பவர், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் சமையலறை கட்டிடங்கள் மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தார். இந்த பணிகளுக்கான நிலுவைப் பில் தொகையை அனுமதித்து விடுவிப்பதற்காக, வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) செந்தில்குமார் ரூ.20,000 லஞ்சமாகக் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவிச்சந்திரன், திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, இரசாயனம் தடவப்பட்ட பணத்தை ரவிச்சந்திரனிடமிருந்து செந்தில்குமார் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்சப் பிரிவு போலீசார் அவரைப் பொறிவைத்து கையும் களவுமாகப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.