திருத்தணி ஆடிக்கிருத்திகை... திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், ஆகஸ்ட் 6 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கருவூலங்கள் மற்றும் சார்ந்த நிதியக அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு அத்தியாவசியப் பணிகளுக்காக வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி வழங்கப்படும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலைநாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.