திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் ஆட்டோக்கள் செல்ல 2 நாட்கள் தடை!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் என்பதால், பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு திருத்தணி மலைக்கோவிலில் உள்ள குறைந்த இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தக் கோவில் நிர்வாகம் முடிவை எடுத்துள்ளது. மலைப்பாதையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கக் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மலைக்கோவில் நுழைவுப் பகுதியிலிருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் செல்வதற்காகக் கோவில் சார்பில் இலவசப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படிக்கட்டுகள் வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லை.
நாளை (திங்கட்கிழமை) ஆட்டோக்கள் செல்ல அனுமதி இருக்குமா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை என்றாலும், கூட்ட நெரிசலைப் பொறுத்து அன்றைய தினம் முடிவெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.