திருவள்ளூரில் 7 நாட்கள் ‘பட்டாசு’ விற்பனைக்குத் தடை - கலெக்டர் உத்தரவு - விதிமீறினால் கடும் எச்சரிக்கை!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பட்டாசு கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஆட்சியரின் உத்தரவுப்படி மொத்தம் 7 நாட்கள் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலமான ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 வரை (4 நாட்கள்) மற்றும் வாக்கு எண்ணிக்கை காலங்களான மே 2 முதல் மே 4 வரை (3 நாட்கள்) என 7 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் மற்றும் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிடங்குகள் கட்டாயம் மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கத் தாசில்தார் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரவை மீறி ரகசியமாகப் பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடும்போது மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்முடிவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.