போதையில் நண்பர்களுக்குள் தகராறு! கிணற்றில் தள்ளி சென்டரிங் தொழிலாளி கொலை
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், நண்பரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேல் அயனம்பாக்கம் சந்திரமவுலீஸ்வரர் கோவில் தெரு பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற திருவேற்காடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சின்ன கோலடி ரெட்டி தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் (44) என்பதும், அவர் சென்ட்ரிங் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. முதற்கட்டமாக அவர் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்த நிலையில், பாஸ்கரனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பாஸ்கரனும், அவரது நண்பரான சரவணன் (37) என்பவரும் ஒன்றாக செல்வதும், பின்னர் சரவணன் மட்டும் தனியாக திரும்பி வருவதும் பதிவாகியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று பாஸ்கரனும் சரவணனும் கிணற்றின் அருகே ஒன்றாக மது அருந்தியதாகவும், அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த சரவணன், பாஸ்கரனை கிணற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.