திருவண்ணாமலை தீபத் திருவிழா... உயர்மட்டக் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 'அம்மணி அம்மான் மடத்தை' ஆக்கிரமித்திருந்த டி.எஸ்.சங்கர் என்பவரை அப்புறப்படுத்த அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அம்மணி அம்மான் மடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தி, நிலத்தை அளந்து சுற்றுச்சுவர் எழுப்பக் கோவில் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டனர்.
மடத்தில் காலியாக உள்ள 25,000 சதுர அடி நிலத்தில் 'அம்மணி அம்மான்' பெயரில் புதிய பக்தர்கள் வளாகத்தைக் கட்ட வேண்டும் என்றும், இதற்கான கட்டுமானப் பணிகளை 2027 மார்ச் இறுதிக்குள் தொடங்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
நிரந்தரக் கட்டடம் கட்டப்படும் வரை, வரவிருக்கும் கார்த்திகைத் தீபத் திருவிழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காகத் தற்காலிகக் காத்திருப்புக் கூடம், உணவுக் கூடம், பொருட்கள் வைப்பகம் மற்றும் கழிப்பறைகளை உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகள் சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கப் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில், அறநிலையத்துறை ஓய்வுபெற்ற இணை ஆணையர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட போர்க்கால நடவடிக்கைகளின் அறிக்கையை வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோவில் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.