தீபாவளி சீர் கொடுக்கச் சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்… ரூ.2 கோடி நகைகள் மாயம்!
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே, தீபாவளி பண்டிகைக்காக மகள் வீட்டுக்குச் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்புக்கிளார் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (61). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது மனைவி விமலாவும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர்களது மகள் ஓசூரில் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் 3-ம் தேதி தம்பதியினர் மகளுக்கு தீபாவளி சீர்வரிசை கொடுப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு ஓசூர் சென்றுள்ளனர்.
பின்னர் நேற்று காலை ஊர் திரும்பியபோது வீட்டின் முன்பக்கப் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறை முழுவதும் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த காசுமாலை, வளையல், நெக்லஸ் உள்ளிட்ட 168.5 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்