தீபாவளிக்கு ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள்! கூட்டுறவுத்துறையின் சிறப்புத் திட்டம் இன்று தொடக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை இன்று (நவம்பர் 5) தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமும், சென்னையில் 4 நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலமும் இந்த விற்பனை நடைபெறுகிறது.
நவம்பர் 7-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விற்பனை நடைபெற உள்ளது. ஒரு தொகுப்பு ரூ.100 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுப்பிலும் பெரிய வெங்காயம் 500 கிராம், தக்காளி 500 கிராம், கத்தரிக்காய் 250 கிராம், உருளைக்கிழங்கு 250 கிராம், கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம் மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு தேங்காய் இடம்பெறும்.பண்டிகைக் காலத்தில் அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொதுமக்கள் பெறும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.