மாணவர்களுக்கு ‘ஆர்மி கிரீன்’.. மாணவிகளுக்கு ‘லிலாக் மிஸ்ட்’! 🚲 தமிழக அரசின் சைக்கிள் திட்டத்தில் புதிய மாற்றம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கான டெண்டர் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களின் நிறங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய டெண்டர் நிபந்தனைகளின்படி, மாணவிகளுக்கு வழங்கப்படும் சைக்கிள்கள் ‘லிலாக் மிஸ்ட்’ (Lilac Mist) நிறத்திலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்கள் ‘ஆர்மி கிரீன்’ (Army Green) நிறத்திலும் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சைக்கிள்களுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஹெல்மெட்டுகளின் தரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழங்கப்படும் ஹெல்மெட்டுகள் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்றவையாக இருப்பது கட்டாயம் என டெண்டர் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சைக்கிள் வழங்கும் திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை உள்ளடக்கிய இலவச சைக்கிள் வழங்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பட்ஜெட் ஆவணங்களிலும் இந்தத் திட்டம் இடம்பெற்றுள்ளது.
இதற்கான டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் வரும் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிளின் நிறம் மட்டுமின்றி, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹெல்மெட்டுக்கு ISI தரச்சான்று கட்டாயமாக்கப்பட்டிருப்பது இந்த டெண்டரில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.