பயணிகளைப் பாதியில் இறக்கிவிட்டால் நடவடிக்கை... அரசு பஸ் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

 

 

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இந்த அறிவுரைகளை வழங்கினார்.

அதன்படி, அரசுப் பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்தி, பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். பயணிகளை ஏற்ற மறுப்பதோ, பாதி வழியில் இறக்கிவிடுவதோ கூடாது. பேருந்துகளைத் தூய்மையாகப் பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்கள், முதியவர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் மற்றும் நோயாளிகளிடம் கூடுதல் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அனைத்து பயணிகளிடமும் மரியாதையாகவும் பொறுமையாகவும் பழக வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சேவை விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழாக்கால சிறப்புப் பேருந்துகளில் பணியாற்றும் ஊழியர்கள் பேருந்து நிலையங்களில் உள்ள ஓய்வறைகளில் மட்டுமே தங்க வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அவ்வப்போது பயிற்சியும் மனநல ஆலோசனையும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.