TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தேதி மாற்றம்: புதிய தேதியை அறிவித்தது தேர்வாணையம்!
தமிழ்நாட்டில் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 26 உயர் பதவிகளுக்கான குரூப்-1 (Group 1) முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் தேதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 23, 2026 அன்று வெளியிட்ட குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையின்படி, முதல்நிலைத் தேர்வானது வரும் செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி முற்பகலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிர்வாகக் காரணங்களால் இத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, செப்டம்பர் 27, 2026 முற்பகலில் நடைபெறும் என்று தேர்வாணையம் தனது புதிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தேர்வு தேதி மாற்றப்பட்டிருந்தாலும், இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
இத்தேர்விற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 29, 2026 ஆகும்.
தேர்வு தேதி சுமார் 20 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், குரூப்-1 தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்குப் பாடங்களைப் திருப்புதல் செய்யக் கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் வெளியாகும் தேதிகளைத் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.