டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு.. அதிக எண்ணிக்கையில் அரசியல் கேள்விகள் இருந்ததாக விமர்சனம்!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 முதல்நிலைத் தேர்வு எவ்வித பரபரப்பும் இன்றி அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வினாத்தாளின் தரம் மற்றும் கேள்விகளின் பின்னணி குறித்துக் கல்வியாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

வினாத்தாளில் அச்சுப்பிழை, எழுத்துப்பிழை மற்றும் கருத்துப் பிழைகள் ஏதும் இன்றித் தேர்வாணையம் மிகக் கவனமாகச் செயல்பட்டுள்ளதைப் போட்டியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர்.

புற்றுநோய் தீர்க்கும் 'ஹைட்ரோஜெல்' மருந்து, IUBMB என்சைம், 'டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம்', லோக்பால் - லோக்ஆயுக்தா, பொதுக் கணக்குக் குழு மற்றும் இந்தியப் பழங்குடியினர் தொடர்பான கேள்விகள் தீவிரமாகப் படித்த தேர்வர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தன.

பொது அறிவுப் பிரிவில் குறிப்பிட்ட சித்தாந்தம் சார்ந்த தமிழக அரசியல் வினாக்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான நடுநிலைமை மற்றும் பரந்த அறிவுத்திறன் சோதனை வினாத்தாளில் குறைந்துவிட்டதோ என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம், பொது சுகாதாரம், வர்த்தகம், சுற்றுச்சூழல் மற்றும் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள் போதிய அளவில் இடம்பெறவில்லை. விளையாட்டுத் துறையில் 2025 FIDE சதுரங்கப் போட்டி பற்றிய ஒரு கேள்வியைத் தவிர வேறு கேள்விகள் இல்லை.

இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அடிப்படை உரிமைகள் (பிரிவு 28(2)) சார்ந்த வினா அமைக்கப்பட்டிருந்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

தமிழ் வழியில் படித்த தேர்வர்களுக்கு தேர்வு எளிதாக இருந்தபோதிலும், பொதுத் தமிழ் வினாக்கள் பல தமிழின் மாண்பை உயர்த்தும் வகையில் அமையவில்லை என்றும், வினாக்களின் தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொது ஆங்கில வினாக்களை விட பொதுத் தமிழ் வினாக்கள் சற்றே கடினமாகவும் நேரத்தை அதிகம் அடைப்பதாகவும் இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவித்துள்ள நிலையில், இதனைத் தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.