undefined

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால்டிக்கெட் வெளியீடு - தேர்வர்களுக்கு முக்கிய குறிப்பு!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம்கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படவுள்ளன. 

கடந்த பிப்ரவரி 9ம் தேதி நடைபெற்ற குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளின் போது, வினாத்தாள்களின் வரிசை எண் மாறியது மற்றும் தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தத் தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, தற்போது மறுதேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட 828 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வுப் பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது: டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு உதவிப் பிரிவு அலுவலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் என மொத்தம் 5 பேர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மறுதேர்வு எழுதவுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கான புதிய ஹால்டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது: தேர்வர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் உங்களது 'One Time Registration' (OTR) பக்கத்திற்குச் சென்று, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டுப் புதிய ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பழைய ஹால்டிக்கெட்டைப் பயன்படுத்த முடியாது என்பதால், புதிய ஹால்டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தை உறுதி செய்து கொள்வது அவசியம்.

மீண்டும் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க, இந்த முறை கூடுதல் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்வை நடத்தத் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்